தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் விஜய பாஸ்கர். இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிராமமாகும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக ஆர்வம் கொண்ட அமைச்சர் விஜய பாஸ்கர் சொந்தமாக காளைகள் வளர்த்து போட்டிகளில் கலந்து கொள்ள விடுகிறார். இவர் வளர்த்த கொம்பன் காளை மிகவும் புகழ் பெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லுர், அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்ட கொம்பன் காளை யாரிடமும் சிக்காமல் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வந்தது. மேலும் 50 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட கொம்பன் காளை ஒருமுறை கூட சிக்காமல் கலக்கியது. கடந்த ஆண்டு தென்னலூரில் நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற கொம்பன் காளை, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியே வரும்போது அங்கிருந்த தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது அமைச்சர் விஜய பாஸ்கரை மட்டுமின்றி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதன்பிறகு மீண்டும் காளைகள் வாங்கி பயிற்சி அளித்து வருகிறார் அமைச்சர் விஜய பாஸ்கர். தற்போது சின்னக்கொம்பன், வெள்ளைக்கொம்பன், சந்தனக்கொம்பன் உட்பட 5 காளைகளை அவர் வளர்த்து வருகிறார். பொங்கல் விழா நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. அமைச்சர் விஜய பாஸ்கரும் தனது காளைகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகிறார். அது தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.