கடந்த ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. இது தொடர்பாக விஜயபாஸ்கரின் மனைவி, தந்தை, உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடைபெற்றது.

ஆனால் ஓராண்டாக இப்பிரச்சனை கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் அமைச்சர் விஜய பாஸ்கர் லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மாநில அரசுக்கு வருமான வரித்துறை பரிந்துரை செய்திருத்தது.

இதையடுத்து இபிஎஸ்ம் அமைச்சர் விஜய பாஸ்கரும் கடந்த வாரத்தில் மூன்று முறை சந்தித்துப்  பேசினர். அப்போது விஜய பாஸ்கர் தனது அமைச்சர் பதவியை  ராஜினாமா செய்ய வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியதாக தெரிகிறது.

ஆனால் தன்னை ராஜினாமா செய்யச் சொன்னால் 30 எம்எல்ஏக்களுடன் டி.டி.வி.தினகரன் அணியில் சேர்ந்து விடப் போவதாக  விஜய பாஸ்கர் மிரட்டடியதாக தகவல் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதிமுகவின் கட்சிப் பதவிகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் அமைச்சர்கள் டிகேஎம் சின்னையா, பி.வி.ரமணா ஆகியோருக்கு பதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடிக்கு மிரட்டல் விடுத்த அமைச்சர் விஜய பாஸ்கருக்கு கழக் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஓபிஎஸ் – இபிஎஸ ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிவிப்பின்படி கழக சட்ட ஆலோசகராக பி.எச்.பாண்டியனும், கழக அமைப்புச் செயலாளர்களாக பாப்பா சுந்தரம், அமைச்சர் விஜய பாஸ்கர், முத்துராமலிங்கம் ஆகியோர் நியமிக்கபட்டுள்ளனர்.

எப்படியோ எடப்பாடியாரை மிரட்டி தனது அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டதுடன், கட்சியில் பெரிய பதவியையும் பெற்றுக் கொண்டார் அமைச்சர் விஜய பாஸ்கர்.