திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன், உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் குதித்திருக்கும் நிலையில், பல்வேறு சர்ச்சைகளில் 
சிக்கி வருகிறார். அதற்கு தகுந்தாற்போல் பதிலும் அளித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அவ்வப்போது, தனது ட்விட்டர் பக்கத்தில், 
அமைச்சர்களின் ஊழல் குறித்தும் பதிவு செய்து வருகிறார். 

அமைச்சர்களின் ஊழல் குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் வேலுமணி, களத்தில் இறங்குங்கள் தம்பி... அப்போது தெரியும் என்று கிண்டலாக ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அமைச்சர் வேலுமணியின் இந்த கருத்துக்கு பதிலளித்த உதயநிதி, நான் எப்பவும் களத்துலதான் இருக்கேன் வேலுமணிண்ணே. உங்கள் ஊழல் குளம், கோவையில் இருப்பதற்கான ஆதாரத்தை போட்டோவா போட்டிருக்கேன். 

தமிழ்நாட்டில் கோவையை ஊழலுக்கே முன்னுதராணமாக கொண்டு வந்தவர் நீங்கள். விரைவில் நிதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பதில் சொல்ல தயாராக இருங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் புகைப்பட ஆதாரத்தையும் உதயநிதி வெளியிட்டுள்ளார். இதற்கு, அமைச்சர் வேலுமணி, என் வேலையைப் பற்றி ஆரோக்கியமான விமர்சனங்களை எப்போதும் வரவேற்கிறேன். 

ஆனால், நீங்கள் பேசியிருப்பதும், பதிவிட்டிருப்பதும் அப்பட்டமான பொய் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமைச்சர் வேலுமணி - உதயநிதி ஸ்டாலின் ஒருவருக்கொருவர் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் வேலுமணிக்கு, உதயநிதி ஸ்டாலின் அளித்த பதிலை, திமுகவைச் சேர்ந்த பலர் 'ரீ ட்விட்' செய்து வருகின்றனர்.