Asianet News TamilAsianet News Tamil

ஏரிகள் உடையும் என்ற வதந்தியை நம்பாதீங்க..! மக்களுக்கு அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள்..!

minister udhayakumar warns those who spreading rumours
minister udhayakumar warns those who spreading rumours
Author
First Published Nov 2, 2017, 11:10 AM IST


கனமழையால் ஏரிகள் உடையும் என்ற வதந்தியை மக்கள் நம்பவேண்டாம் எனவும் வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதுமே கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. கடந்த 10 மணிநேரமாக மழை இல்லாததால் சென்னையில் இயல்புநிலை திரும்பிவருகிறது.

இந்நிலையில், சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பருவமழையை எதிர்கொள்ள வருவாய்த்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

வடகிழக்குப் பருவமழையால் கனமழை பெய்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக 4500 தாழ்வான பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிவாழ் மக்களுக்கு இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டுபிடிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மீட்புக் குழுக்களுக்கு அந்தந்த பகுதிகளை சேர்ந்த சமூக ஆர்வலர்களும் தன்னார்வலர்களும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். பாதிக்கப்படும் மக்களை மீட்டு தங்கவைப்பதற்கான முகாம்களும் உணவுகளும் மருந்துகளும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம், புயல் உள்ளிட்ட பேரிடர்களின் போது சந்தித்த பிரச்னைகளின் மூலம் ஏற்பட்ட அனுபவத்தால் இந்த முறை மீட்பு, நிவாரணம் உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் அரசு சிறப்பாக செயல்படுகிறது.

கடந்த காலத்தில் பேரிடர் சமயத்தில் செயல்பட்டதை விட மீட்பு நடவடிக்கைகளில் இந்த முறை அரசு சிறப்பாக செயல்படுகிறது. முன்பைவிட விரைவாக மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

கனமழை காரணமாக ஏரிகள் உடையும் என்பது போன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. மக்கள் யாரும் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios