எம்ஜிஆர் தமிழகத்தின் தலைநகரத்தை திருச்சிக்கு கொண்டுவர எவ்வளவோ முயற்சித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் சென்னையை தவிர வேறு எங்கும் தலைநகரை மாற்றக்கூடாது என்று ஒற்றைக்காலில் நின்றதால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது. சென்னைக்கு சென்டராக பார்த்தால் திருச்சி தலைநகராக அமையவேண்டும். அதற்கான கட்டமைப்புகள் இல்லாமல் போனதால் தான் அந்த ஆசை எம்ஜிஆருக்கு நிறைவேறாமல் போனது.  இன்று அதிமுக அரசாங்கத்தின் முதல்வரின் குரலாக அமைச்சர் உதயக்குமார் மதுரையை 2வது தலைநகரமாக உருவாக்க வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார். அதற்கான இடம் தயார் நிலையில் இருக்கிறதாம். 2வது தலைநகர் அமைவது  காலத்தின் கட்டாயம், மக்களின் விருப்பம் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருப்பது எதிர்கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டாவது தலைநகர் அமைவது குறித்து அமைச்சர் உதயக்குமார் பேசும் போது..

"மதுரை நகரம் பாரம்பரியம் மிக்க ஒரு பழமையான நகரம். பெருமைபெற்ற நகரம். இதற்கு தென்னவன்,ஆலவாய், கூடல், கன்னிபுரீசம், சிவநகரம், சிவராஜதானி, கோவில்மாநகரம், கடம்பவனம், நான்மாடக்கூடல் என்று அழைக்கப்படும் நகரமாக புகழ் பெற்றுள்ளது.மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில் தவஶ்ரீஶ்ரீருப்பரங்குன்றம்,பழமுதிர்சோலை,திருமலைநாயக்கர் மகால்,தெப்பக்குளம் , ராணிமங்கம்மா சத்திரம், காந்தி மியூசியம் உள்ளன.

ஆண்டு தோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் தான் நடைபெறும்.மதுரையில் ஒரு காலத்தில் நூற்பாலைகளில் கைத்தறி நெசவுப் பட்டறைகளும் நிறைந்து இருந்தன. மதுரையின் முக்கிய அடையாளமாக ஹார்விமில் மகாலட்சுமி மில், விசாலாட்சி மில் கப்பலூர் தியாகராஜ மில் உள்ளிட்ட பல மில்கள் இருந்தது. பல்லாயிரகணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தது

காலப்போக்கில் இந்த மில்களில எல்லாம் இயங்காததால் மக்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி தொழிலாளர்கள் எல்லாம் பெட்டிக் கடைகள், தேனீர் கடைகள் வைத்தும் சிலர் சம்பளம் தேடி வேலைக்கும் சென்று விட்டனர்.வற்றாத நதியாக நமது வைகை இருந்து கொண்டிருக்கிறது. நமது மதுரையின் பாரம்பரியம் ஏறத்தாழ 2500 க்கும் மேற்பட்டது. பண்பாடு பாரம்பரிய மிக்க நகரம் மதுரை.மதுரையின் வீதிப் பெயர்களுக்கும் வரலாறும் உண்டு.சோத்துக்கடை வீதி என்றொரு இடமுள்ளது. இந்தப் பகுதியில் 'சாப்பிட வாங்க.. சாப்பிட வாங்க' என்று சத்தம்போட்டு கூப்பிட்டதால் இப்பெயர் வந்தது.

கலைநயமிக்க ஜரிகை வேலைப்பாடு செய்யும் தொழில் செய்யும் இடத்திற்கு ஜரிகை கார தெரு என்றொரு பெயர் வந்தது. தங்க நாணயம் தயாரிக்கும் பட்டறைகளால் நிரம்பிஉள்ள தெருவிற்கு அக்கசாலை என்று பெயர். பென்சில்,பேனா, கண்டுபிடிக்கும் முன்புஎழுத்தாணியால் எழுதப்பட்டது. அதன்பெயரில் உருவானது எழுத்தாணிக்காரதெரு.
மேலும் மேலஅண்ணாதோப்பு, கொல்லப்பட்டரைதெரு, சிக்கந்தர் சாவடி, சுண்ணாம்புகாரதெரு, வாழைக்காய்பேட்டை, வெற்றிலைபேட்டை, புட்டுத்தோப்பு,வடக்குபோக்கிதெரு, ஆழ்வார்புரம், ஜம்பூராபுரம், வில்லாபுரம்,இஸ்மாயில்புரம், அவனியாபுரம்,ஜெய்ஹிந்த்புரம் இதில் புரம் என்று சொல்லிருக்கு வாழ்விடம் என்று பொருள்.

இந்த நான்காண்டுகளில் மதுரை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வரும், துணைமுதல்வரும் வழங்கி உள்ளனர் மதுரையில் பலகோடி ரூபாய் மதிப்பில் வைகை இருபுறமும் நான்கு வழிச்சாலை, கோரிப்பாளையத்தில் மேம்பாலம், பெரியார் பஸ் நிலையம் அருகே மேம்பாலம் வர உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்றக் கிளை இருக்கிறது.இந்த சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் காலம் வந்துவிட்டது. 4 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன. தென் மாவட்ட மக்களின் நியாயமான நீண்ட நாள் கனவான திட்டம் சென்னைக்கு அடுத்து மதுரையை தமிழ்நாட்டில் 2-வது தலைநகரமாகக் கொண்டு வர வேண்டும் என்பதாகும்.

சென்னையில் 1 கோடி மக்கள் தொகை இருப்பதால், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது. தொழில் முதலீடுகளும் வந்துள்ளன. மதுரையை 2-வது தலைநகரமாக மாறினால் தலைநகர் அந்தஸ்து கிடைக்கும். இழந்து போன தொழில்கள் மீண்டும் வரும். முதலீடுகள் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பைத் தேடி சென்னைக்கு செல்ல வேண்டியதில்லை. இது மக்களின் வேண்டுகோள். காலத்தின் கட்டாயம். சென்னையில் உள்ளது போன்று அரசுத் துறைகள் இங்கு அமைவதற்கு கட்டமைப்புக்காக இடம் தயார் நிலையில் உள்ளது.

நாம் கேட்பதை செய்யக்கூடிய முதல்வர்தான் நமக்கு கிடைத்திருக்கிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதல்வர் இருக்கிறார். குஜராத்தில் அகமதாபாத், காந்திநகர் ஆகிய இடங்களில் தனித்தனி தலைநகரங்கள் உள்ளன. ஆந்திராவிலும் 2 தலைநகரங்கள் இருக்கின்றன. தலைநகரம் பிரிக்கப்படும்போது எத்தனை மாவட்டங்கள் உள்ளடங்கும் என்பது குறித்து அதற்காக அமைக்கப்படும் குழு முடிவு செய்யும். மக்களின் கருத்தையும் அரசு கேட்டும். தனிப்பட்ட மனிதராக இந்த கோரிக்கையை வைக்கவில்லை.