அதிமுக ஆட்சியை விமர்சித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள், வேலைவாய்ப்புகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல்கள் குறித்து தனியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.


இந்நிலையில் மு.க. ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டது குறித்து தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “தமிழக முதல்வர் செயல் நாயகன். அதனால் அவர் செயல்படுகிறார். ஆனால். மு.க. ஸ்டாலின் அறிக்கை நாயகன். அதனால்தான் அறிக்கை கேட்கிறார். மு.க. ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை, கறுப்பு அறிக்கை என்றெல்லாம் கேட்கிறார்” என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.