நடிகர் விஜய் வீட்டில் அவருக்கும்அவரது தந்தைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் திருச்சியை சேர்ந்த ரசிகர் மன்ற தலைவரை போலீசார் ஓட ஓட துரத்திக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தை அண்மையில் எஸ்ஏசி அரசியல் கட்சியாக மாற்றினார். இந்த கட்சிக்கு தலைவராக திருச்சியை சேர்ந்த ஆர்.கே.ராஜா எனும் பத்மநாபனை எஸ்ஏசி நியமித்தார். மேலும் தனது மனைவி ஷோபாவை பொருளாளர் ஆக்கினார். ஆனால் மகன் விஜய் கேட்டுக் கொண்டதால் பொருளாளர் பதவியில் இருந்து ஷோபா விலகினார். இதே போல் நடிகர் விஜய் தரப்பில் இருந்து திருச்சி ஆர்.கே.ராஜாவிடம் பேசியதாக சொல்கிறார்கள்.

ரசிகர் மன்றத்தில் வீண் குழப்பங்களை தவிர்க்க எஸ்ஏசி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு ஆர்.கே.ராஜாவிடம் பேரம் நடைபெற்றுள்ளது. ஆனால் ஏற்கனவே திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவராக இருந்த ஆர்.கே.ராஜாவை தற்போதைய அகில இந்திய பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் நீக்கினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் ஆர்.கே.ராஜா எஸ்ஏசியிடம் நெருங்கினார். மேலும் ஆரம்பம் காலம் முதல் ஆர்.கே.ராஜா எஸ்ஏசி ஆதரவாளராகவே இருந்து வருகிறார்.

இதனால் எஸ்ஏசி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக முடியாது என்று ஆர்.கே.ராஜா திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனிடையே எஸ்ஏசி தனது புதிய கட்சியை எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். அதிலும் தேர்தல் சமயத்தில் திமுகவிற்கு ஆதரவாக பணியாற்றவும், பிரச்சாரம் செய்யவும் எஸ்ஏசி திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதற்கு வசதியாகவே எஸ்ஏசி கட்சி ஆரம்பித்துள்ளதாகவும் இதனை பிடிக்காமல் தான் அந்த கட்சிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று விஜய் அறிவித்துள்ளார்.

ஆனால் அந்த கட்சியில் விஜய் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவதை தடுக்க முடியாது என்கிறார்கள். ஏனென்றால் விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரே எஸ்ஏசி பதிவு செய்து வைத்துள்ளதாக கூறுகிறார்கள். எனவே நீதிமன்றம் சென்றாலும கூட உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது என்று சொல்கிறார்கள். எனவே மறைமுகமாக எஸ்ஏசி கட்சியை ஆட்டம் காண வைக்க விஜய் முயன்று வருவதாக கூறுகிறார்கள். மேலும் இந்த விஷயத்தில் நடிகர் விஜய்க்கு முக்கிய துறை ஒன்றை கவனித்து வரும் அமைச்சர் உதவுவதாக சொல்கிறார்கள்.

மெர்சல் பட பிரச்சனையின் போதும் இந்த அமைச்சரின் தலையீட்டால் தான் விஜய் முதலமைச்சரை சந்தித்து படத்திற்கு விலங்குகள் நல வாரியம் மூலம் வந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடிந்தது. அதே வகையில் அந்த அமைச்சர் ரசிகர் மன்ற பிரச்சனையில் விஜய் பக்கம் இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் அந்த அமைச்சரின் ஏற்பாட்டின் பேரில் நடிகர் விஜய் டிஜிபியிடம் பேசியதாகவும் அதன் அடிப்படையில் விஜய் பெயரில் எஸ்ஏசி ஆரம்பித்த கட்சியின் தலைவரை போலீசார் வேட்டையாடுவதாகவும் சொல்கிறார்கள்.

திருச்சியை சேர்ந்த ஆர்.கே.ராஜா மீது இதுவரை எந்த குற்ற வழக்குகளும் கிடையாது. ஆனால் அவர் மீது விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து ராஜா தலைமறைவான நிலையில் அவரது மனைவி மற்றும் மாமானாரை போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர். ஒரு மோசடி வழக்கு விசாரணையில் போலீசார் இந்த அளவிற்கு தீவிரம் காட்டுவதன் மூலமே இந்த விவகாரத்தில் யார் யார் தலையீடு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.

விஜய் ரசிகர் மன்ற பிரச்சனைக்கு காரணம் எஸ்ஏசி. அப்படி இருக்கையில் விஜய் தனது தந்தை மீது நடவடிக்கை எடுக்காமல் திருச்சியை சேர்ந்த அப்பாவி ரசிகரை குறி வைத்திருப்பது அவரது ரசிகர்களையே ஆத்திரம் அடைய வைத்துள்ளது. இப்படிப்பட்டவரா விஜய்? என்கிற புலம்பல்களும் எழுந்துள்ளது.