’என்னா ஃபாஸ்ட்டு?’ என்று இந்திய அரசியலே அதிரும் வண்ணம், 2006 முதல் 2011 வரை நடந்த தி.மு.க. ஆட்சியின் குற்றங்கள் ஒவ்வொன்றாக இனி வெளியிட்டப்படுமென எடப்பாடி எச்சரித்திருக்கிறார். 

’ஏழு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஆட்சியோட குற்றங்குறைகளை இவ்வளவு பொறுமையாவா வெளியிடுவீங்க? என்னா ஃபாஸ்டுய்யா நம்ம முதல்வரு?’ என்று ஆளாளுக்கு கமெண்ட் அடித்துக் காலி செய்து கொண்டிருக்கும் நிலையில், தினகரனும் தட்டி காயப்போட்டிருக்கிறார் இந்த ஆட்சியை. 

”இந்த அரசாங்கத்தின் மீதும், முதல்வர் மற்றும் துணை முதல்வர்  மீது, அமைச்சர்கள் மீது என ஒட்டு மொத்தமாக அத்தனை பேர் மீதும் தொடர்ந்து புகார்களும், ஊழல் விமர்சனங்களும் வந்து கொட்டிக் கொண்டுள்ளன. 

ஒரு நோயாளி ஐ.சி.யு.வில் இருக்கும்போது அவரது உடலுறுப்பு ஒவ்வொன்றாக செயல் இழக்கும். அது போல இந்த ஆட்சியின் ஒவ்வொரு துறையும் பலவித குற்றச்சாட்டுக்களில் மூழ்கி, கரைந்து வருகிறது. மீண்டும் தமிழகத்தில் மின்வெட்டு தலைதூக்கியாட துவங்கிவிட்டது. இந்த மாநிலத்தை இருளுக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் இரு முதல்வர்களும் இணைந்து. இதை வைத்துப் பார்க்கும்போது இந்த ஆட்சி அடங்கும் நேரம் வந்துவிட்டதென புரிகிறது. ” என போட்டுப் பொளந்துவிட்டார். 

குறிப்பாக அமைச்சர் தங்கமணியை ‘மின்வெட்டு அமைச்சர்’ என்று நக்கலடித்திருந்தார் டி.டி.வி. இதற்கு நேற்றே பதிலளித்த தங்கமணி “என்னை மின்வெட்டு அமைச்சர், ஊழல் செய்யும் அமைச்சர் என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார் தினகரன். 

ஊழல் செய்தது யார், சிறை சென்றது யார், யார் மீது ஊழல் வழக்கு விசாரணையில் இருக்கிறது? என்று மக்களுக்கு தெரியும். திகார் ஜெயிலுக்கு தினகரன் ஏன் சென்றால்? சுற்றிப்பார்க்கவா, ஊழல் வழக்கில் சிக்கித்தானே!. 

என்னையெல்லாம் குறை சொல்ல இவருக்கு எந்த தகுதியும் கிடையாது.” என்று திருப்பித் தாக்கியுள்ளார். 
பங்காளிங்க சண்டை என்னைக்குதான் அடங்குமோ?!