கொங்கு மண்டலத்தில் திமுக வேண்டுமானால் பின்தங்கலாம், வளர்ச்சித்திட்டங்கள் பின்தங்கவில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

 திருப்பூரில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்;- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லிக் கொள்கிறார். அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பண்ணன் ஆகியோர் இந்த மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள் சேர்ந்து இந்த பத்தாண்டுக் காலத்தில் எத்தனையோ திட்டங்களை இந்த மண்டலத்துக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அதனைச் செய்தார்களா? என கேள்வி எழுப்பினார்.

இந்த மண்டலத்தைச் சேர்ந்த வேலுமணியும் தங்கமணியும் எடப்பாடி பழனிசாமிக்கு இணையாகச் சம்பாதிப்பதில் போட்டி போடுகிறார்களே தவிர, மக்கள் பணிகளைச் செய்யவில்லை. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஊழலாட்சித் துறை அமைச்சர் என்று தான் சொல்ல வேண்டும். பினாமி கம்பெனிகளைத் தொடங்கி உள்ளாட்சித் துறை டெண்டர்கள் அனைத்தையும் சூறையாடி வருகிறார். மேலும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மீது காற்றாலை மின்சார ஊழல், தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் ஊழல், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்வதில் ஊழல், மின் வாரியத்துக்கு உதிரிப்பாகங்கள் வாங்குவதில் ஊழல் என்று பல்வேறு புகார்கள் குவிந்துள்ளது என விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இந்நிலையில், திருச்செங்கோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி;- கொங்கு மண்டலத்தில் திமுக வேண்டுமானால் பின்தங்கலாம் , வளர்ச்சித்திட்டங்கள் பின்தங்கவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்பதால் அரசியலுக்காக அரசு மீது ஸ்டாலின் குறை கூறுகிறார். என் மீதும், அமைச்சர் வேலுமணி மீதும் தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். எங்களுக்கு மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.