minister thangamani explained why power cut in chennai

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதுமே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய வடகடலோர மாவட்டங்களை வாட்டி எடுத்து வருகிறது.

நேற்றிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் சென்னையில் வேளச்சேரி, சைதாபேட்டை, திநகர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் புறநகர்ப்பகுதிகளான முடிச்சூர், கோவிலம்பாக்கம், மாதவரம், பூந்தமல்லி என சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கனமழையால் சென்னை கொடுங்கையூர் பகுதியில் தேங்கிய தண்ணீரில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து 2 சிறுமிகள், கடந்த புதன்கிழமை உயிரிழந்தனர்.

இந்நிலையில், நகரின் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

மின் துண்டிப்பு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பல இடங்களில் தேங்கியுள்ள நீரின் அளவு 4 அல்லது 5 அடியைத் தாண்டியுள்ளது. இப்படி அதிக நீர் சூழ்ந்துள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடியத் தொடங்கியுடன் மின் இணைப்பு மீண்டும் வழங்கப்படும். பொது மக்களுக்கு வேறு ஏதாவது குறைகள் இருந்தால் 24 மணி நேரமும் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.