பொட்டி மாத்துற கதை வேண்டாம் எடப்பாடி…! போட்டு தாக்கிய தமிழக அமைச்சர்…
யாருடைய பெட்டியையும் யாரும் மாற்றவில்லை, உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.
சென்னை: யாருடைய பெட்டியையும் யாரும் மாற்றவில்லை, உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் களம் இறங்கி இருக்கின்றன. அதிமுகவும் தமது தேர்தல் பிரச்சாரத்தை வேகமாக முன் எடுத்துள்ளது.
இது தொடர்பான கட்சி நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டத்தில் பேசும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பெயருக்கு ஒன்றிரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர் என்று குற்றம்சாட்டி வருகிறார்.
இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமியின் இந்த தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:
அதிமுக அவர்களது ஆட்சியில் என்ன தவறுகளை செய்தார்களோ அதையே திமுக அரசும் செய்யும் என்று எண்ணி கொண்டு இருக்கிறார்கள். பாம்பின்கால் பாம்பறியும் என்பதை போல எங்களையும் நினைத்து கொண்டு அவர்கள் இருக்கின்றனர்.
எடப்பாடியும் அப்படி ஒரு கற்பனை உலகத்தில் இருக்கிறார். 4 மாதங்களில் நிறைவேற்றி இருக்கக்கூடிய வாக்குறுதிகள், திட்டங்களை கண்டு மக்கள் ஆதரவு தருகின்றனர். ஆகையால் யாருடையை பெட்டியையும் யாரும் மாற்றவில்லை. மக்களின் ஆசியோடும், ஆதரவோடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என்றார்.