Asianet News TamilAsianet News Tamil

உங்க ஆட்சியில் செய்ததை எல்லாம் மறந்துட்டீங்க போல... ஓபிஎஸ் அறிக்கையால் கடுப்பான தங்கம் தென்னரசு...!

கெயில் திட்டம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட  அறிக்கையை சுட்டிகாட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Minister Thangam tennarasu slams OPS For Gail project
Author
Chennai, First Published Jul 19, 2021, 7:07 PM IST

ஓசூர் வழியாக உத்தனப்பள்ளி வரை விவசாயிகள் நிலங்கள் ஊடே எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும், கெலமங்கலத்தில்  எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாகப் பதிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Minister Thangam tennarasu slams OPS For Gail project

அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் நிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டத்தினை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவித்து அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 17.7.2021 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, பின்வரும் விவரங்களை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.தமிழ்நாட்டில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக் குழாய் பதிக்கும் திட்டங்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் கெயில் நிறுவனம் போன்ற ஒன்றிய அரசின் நிறுவனங்களால் கடந்த ஆட்சிக்காலத்திலிருந்தே, குறிப்பாக 2018 ஆம் ஆண்டு முதல் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தினால் காவிரிப்படுகை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து திருச்சிராப்பள்ளி வரை குழாய் பதிக்கும் திட்டத்தில் சுமார் 104 கி.மீ. நீளத்திற்கும், எண்ணூரிலிருந்து தூத்துக்குடி வரையிலான குழாய் பதிக்கும் திட்டத்தில் 810 கி.மீ. நீளத்திற்கும், கெயில் நிறுவனத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாதானம்-மேமாத்தூர் குழாய் பதிக்கும் திட்டத்தில் 29 கி.மீ. நீளத்திற்கும், சிங்கசந்திரா-கிருஷ்ணகிரி குழாய் பதிக்கும் திட்டத்தில் 12 கி.மீ. நீளத்திற்கும் மற்றும் கொச்சியிலிருந்து பெங்களுரு வரையிலான குழாய் பதிக்கும் திட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 கி.மீ. நீளத்திற்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 கி.மீ. நீளத்திற்கும் ஆக 13 கி.மீ. நீளத்திற்கும், கடந்த ஆட்சியிலேயே குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. 

Minister Thangam tennarasu slams OPS For Gail project

மேலும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் விஜயவாடா-தர்மபுரி குழாய் பதிக்கும் திட்டத்திற்கு 61 கி.மீ. நீளத்திற்கும், கடந்த ஆட்சிக்காலத்திலேயே குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. ஜனவரி 2018ஆம் ஆண்டு முதல் மார்ச் 2021 முடிய சுமார் 1000 கி.மீ. நீளத்திற்கு பெருவாரியாக விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக் குழாய்கள் தமிழ்நாட்டில் பதிக்கப்பட்டுள்ளன. 

மேலும், எண்ணூர்-மணலி குழாய் பதிக்கும் பணிகள் முடிவுபெற்று இத்திட்டம் கடந்த 6.3.2019 அன்று மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதேபோன்று, இராமநாதபுரம்-தூத்துக்குடி குழாய் பதிக்கும் திட்டம் கடந்த 17.2.2021 அன்று மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்நிகழ்வின்போது அப்போதைய மாண்புமிகு துணை முதலமைச்சர் பங்கேற்றதை நினைவுகூற விரும்புகிறேன். உண்மை நிலை இவ்வாறாக இருக்க, தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது குறித்து எதுவும் அறியாததுபோலவும் இத்தகைய திட்டங்கள் தற்போதுதான் புதிதாக செயல்படுத்தப்படுவது போன்ற ஒரு மாயையை உருவாக்க அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் குழாய் பதிப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது விந்தையாகவும் வியப்பாகவும் உள்ளது.

Minister Thangam tennarasu slams OPS For Gail project


பெட்ரோலியம் மற்றும் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டங்களைப் பொறுத்தவரையில், நில உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும் கூடுதல் இழப்பிடு வழங்கியும் இத்திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எங்கெங்கெல்லாம் சாத்தியக் கூறுகள் உள்ளதோ அவ்விடங்களில் எல்லாம் சாலை ஓரமாக குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசால் வலியுறுத்தப்படுகிறது. இந்த அரசு விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் அறிக்கையினை வெளியிட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. தங்களின் ஆட்சியில் குழாய் பதிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதை வசதியாக மறந்து அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் அவர்கள் இதுபோன்ற விஷமத்தனமான அறிக்கைகளை இனிமேலும் வெளியிடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஓபிஎஸை கடுமையாக விமர்சித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios