மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 8 தேசிய விருதுகள் உட்பட 12 தேசிய விருதுகளை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டார்.  

மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊரக வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில், தமிழகம் சார்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தேசிய விருதுகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினார்.

இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாநில அளவில் 2, மாவட்ட அளவில் 4, ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி அளவில் தலா 1 என 8 தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டுக்காக 1, ரூர்பன் திட்டத்தின் கீழ் 2, தீனதயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில் தேசிய தங்க விருது என 4 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் அமைச்சர் வேலுமணி பெற்றுக்கொண்டார். தமிழக ஊரக வளர்ச்சித் துறை இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 31 விருதுகளை பெற்றுள்ளது.