தமிழக அரசின்  உத்தரவை மீறி  நிறுவனங்கள் செயல்பட்டால் நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்படும் என அமைச்சர் எஸ் பி வேலுமணி எச்சரித்துள்ளார் . கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது .  இதில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது .  ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி இதற்கு தலைமை தாங்கினார் .   சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் ,  சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அரசு கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர் .

 

கூட்டத்தில் கலந்துகொண்ட மாநகராட்சி , ஊரக வளர்ச்சி துறை  , போலீஸ் துறை தெற்கு ரயில்வே மற்றும் இதர துறை அதிகாரிகளிடம் துறை சார்ந்த ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களை கொரோனா  வைரஸ் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்தும்  அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார் .  பின்னர் இது குறித்த செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியதாவது :-  முதலமைச்சரின் ஆலோசனைப்படி உள்ளாட்சி அமைப்பின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்  மற்றும் முன்னெச்சரிக்கைகள்  குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டேன் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் .  நோய் அறிகுறி இருந்தால் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் .  உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி சோப்பு உபயோகித்து கைகளை கழுவினால் கொரோனா வராமல் தடுக்க முடியும் .  இதன்படி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முறைப்படி கைகழுவும் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது . 

 முதலமைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் பயிற்சி மையங்கள்  உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திரையரங்குகள் வணிக வளாகங்கள் நீச்சல் குளங்கள் உடற்பயிற்சி மையங்கள் உயிரியல் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை  வரும்31-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது .  அதேபோல் அங்கன்வாடி மையங்களில்  உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுப் பொருட்களை அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்கவேண்டுமென உத்தவிடப்பட்டுள்ளது.   மேற்கண்டபடி  நிறுவனங்கள் தமிழக அரசின் உத்தரவை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் ,  தவறும் பட்சத்தில் அந்த நிறுவனங்கள் நிரந்தரமாக மூடி சீல்வைக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த புதிய நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறுவதை உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.