பெருநகர சென்னை மாநகராட்சியின் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருவதை போல் மற்ற உள்ளாட்சி அமைப்புகளும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்  அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசியதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமைச்சர்கள் தலைமையில் பல்வேறு உயர் அலுவலர்களை கொண்ட சிறப்பு குழுக்கள் முழு ஊரடங்கு, வைரஸ் தொற்று கண்டறியும் பரிசோதனைகளை அதிகரித்தல், வைரஸ் தொற்று பாதித்த நபர்களை மருத்துவமனை அல்லது கோவிட்  பாதுகாப்பு மையம் மற்றும் அவர்களின் இல்லங்களில் தனிமைப்படுத்தி கண்காணித்தல், வைரஸ் தொற்று பாதித்த நண்பர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், வெளிநாடு வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பியவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல், பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி,இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என கண்டறிய இல்லங்களுக்கு சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள, 12,000 களப்பணியாளர்கள் மற்றும் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்களை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடத்தி அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு தோற்று கண்டறிதல், பொது மக்களிடையே சமூக இடைவெளியை கடைப்பிடித்தால், முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி அல்லது சோப்பு கரைசல் கொண்டு அவ்வப்போது கைகளை சுத்தம் செய்ய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக சென்னையில் வைரஸ் தொற்று நாள்தோறும் படிப்படியாக குறைந்து வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக பத்தாயிரத்திற்கும் மேல் மாதிரிகள், பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கடந்த 13 நாட்களாக தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை சராசரியாக 1,200 என்ற நிலையில் குறைந்துள்ளது. இதேபோன்று பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், தனிமைப் படுத்தும் மையங்களை அமைத்தல், பல்வேறு விளம்பரப் பணிகளின் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனும், பொது சுகாதாரத் துறையுடனும் இணைந்து ஒருங்கிணைத்து செயல்படுத்திட, கொரோனா வைரஸ் தொற்றை தமிழகத்தின் பிற பகுதிகளிலும் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்..