கோவை அருகே உள்ளாட்சித்துறை எஸ்.பி.வேலுமணி சேற்றில் இறங்கி நாற்று நட்ட சம்பவம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. 

கோவையை அடுத்த சாடிவயல் உள்பட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைக்க உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்றுக்காலை காரில் சென்று கொண்டிருந்தார். சாடிவயல் அருகில் உள்ள கல்குத்தி பதி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையோர வயலில் பழங்குடியின மக்கள் நெல் நாற்று நட்டுக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்ததும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடனே ஓட்டுநரிடம் காரை நிறுத்த சொன்னார். பின்னர், காரில் இருந்து இறங்கி வயல் வரப்பில் நடந்து சென்று உழவு பணியில் ஈடுபட்டிருக்கொண்டிருந்தவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் அவர் திடீரென்று சேறு நிரம்பிய வயலில் வேட்டியை மடித்துக் கொண்டு இறங்கி நெல் நாற்று நட்டார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வயலில் இறங்கி நாற்று நடுவதை அந்த வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.