”கோவை” தளபதியின் கோட்டை... முதல்வருக்கெல்லாம் முதல்வர்... ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய செந்தில் பாலாஜி !
கோவை தளபதியின் கோட்டை, அவர் முதல்வருக்கெல்லாம் முதல்வர் என்று முதல்வர் மு.க ஸ்டாலினை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில் மக்கள் சபை கூட்டங்களில் நேரில் கலந்து கொண்ட போது நடந்த சம்பவங்களை இந்த மேடையில் கூறுவதை கடமையாக நினைக்கின்றேன். செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டங்களில் மனுக்களை கைகளில் கொடுத்த ஒரு தாயார், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை சொல்லுங்கள் என்று சொன்னார்கள், நான் அவரிடத்திலே கேட்டேன், மனுவே இப்போதுதான் கொடுக்கிறீர்கள், அதற்குள் முதல்வருக்கு நன்றி சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.
தம்பி நான் இருக்கும் இல்லத்திற்கும், நான் வேலை செய்யும் நிறுவனத்திற்கும் பேருந்தில் பயணிக்கின்ற போது ஒரு மாதத்திற்கு 1800 ரூபாய் நான் செலவு செய்கின்றேன், பேருந்து கட்டணத்திற்கு, 7, 500 ரூபாய் என்னுடைய சம்பளம் இந்த 1800 போகதான் மீதியை இல்லத்திற்கு கொண்டு சென்று இல்லத்தை காப்பாற்றுகிறேன், இல்ல தேவையை பூர்த்தி செய்கின்றேன். இப்போது முதல்வர் அவர்களால் மொத்த சம்பளத்தையும் வீட்டிற்கு எடுத்துச் சென்று வீட்டை காப்பாற்றுகிறேன், வீட்டுத் தேவையை பூர்த்தி செய்கிறேன்.அதனால் எங்கள் குடும்பத்தின் சார்பாக முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
முதல்வர் அவர்கள் இந்தியாவிற்கு இருக்கக்கூடிய முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக சிறந்த திட்டங்களை வழங்கக்கூடிய மாண்புமிகு முதல்வர் அவர்கள், கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், முடிந்த பணிகளையும் தொடங்கி வைத்தும், அதேபோல புதிய பணிகளை தொடங்கி வைக்க வருகை தந்தார்.
முதல்வர் அவர்களுக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை இங்கே பணிவன்போடு சமர்ப்பித்து முதலமைச்சரின் எண்ணங்களை செயல் திட்டமாக உழைக்கின்ற மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல்துறையினர்,அரசு ஊழியர்கள் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடக நண்பர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி.
கோவை எந்நாளும் நம் முதல்வரின் அசைக்க முடியாத கோட்டை, கோவை நம் தளபதியின் கோட்டை, தமிழக மக்களின் நெஞ்சங்களை வென்று தமிழ் மண்ணை ஆளும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோவை மாவட்ட மக்கள் சார்பாக மீண்டும் ஒருமுறை கோடானகோடி நன்றி. மக்களிடையே பேசும் போது, கோவை இனி திமுகவின் கோட்டையாக மாறும் என்பதில் சந்தேகமில்லை’ என்று கூறினார்.