எப்போதும் சிரித்த முகத்துடன் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் டென்சன் ஆனதை பார்த்துவிட்டு செய்தியாளர்கள் மிரண்டு போயினர்.

வேலூர் தொகுதி தேர்தலை முன்னிட்டு அமைச்சர்கள் அனைவரும் அங்கு தான் முகாமிட்டுள்ளனர். அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாணியம் பாடி பகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பாதிரியார்களை சந்தித்து செங்கோட்டையன் ஆதரவு திரட்டினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் வேலூரில் ஏசி சண்முகம் வெற்றி பெறுவது உறுதி என்றார். 100 சதவீதம் இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அவர் கூறினார். அதோடு மட்டும் அல்லாமல் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சண்முகம் திமுக வேட்பாளரை வீழ்த்துவார் என்றும் அவர் கூறினார். திமுகவுக்கும் – அதிமுகவுக்கும் நேரடி போட்டி நிலவுவதால் மக்கள் தெளிவாக இருப்பார் என்றும் செங்கோட்டையன் குறிப்பிட்டார். 

அப்போது பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணைகளின் உயரத்தை 40 அடிக்கு உயர்த்துவது குறித்து செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அதனை தடுக்க சட்டப்பூர்வ வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் கூறினார். அப்போது ஆனால் ஆந்திரா தொடர்ந்து தடுப்பணை பணிகளை மேற்கொள்கிறதே என்று செய்தியாளர் தெரிவித்தார். அதற்கு இது குறித்து மத்தியஅரசுக்கு ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் கூறினார். 

ஆனாலும் விடாத செய்தியாளர்கள் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன என்று கேட்டனர். இதனால் பொறுமை இழந்த செங்கோட்டையன் அப்படி என்றால் என்ன செய்யச் சொல்றீங்க? அரிவாளுடன் ஆந்திராவுக்கு போகச் சொல்றீங்களா என டென்சன் ஆனார். முகத்தில் சற்று புன்முறுவலை வைத்துக் கொண்டு தான் செங்கோட்டையன் இப்படி கூறினார். ஆனால் அவர் பேசிய வார்த்தைகள் கடுமையாக இருந்தன. வழக்கமாக செய்தியாளர்கள் சந்திப்பில் சரியாக பேசிவிட்டு நழுவுவது செங்கோட்டையன் பழக்கம். ஆனால் அவர் டென்சனானது செய்தியாளர்களை அதிர்ச்சி அடைய வைப்பதாக இருந்தது.