எடப்பாடி அணியும் பன்னீர்செல்வம் அணியும் விரைவில் இணைந்து செயல்பட உள்ளதாகவும், இரு அணிகளும் இணைந்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்ய வேண்டும் என பாஜக விரும்புவதாகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சி செய்த போது பாஜகவுக்கு என்று ஒரு அங்கீகாரம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சிறிது சிறிதாக பாஜகவின் பினாமி ஆட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

ஜெயலலிதா மரணத்தின்போது காரணமே இல்லாமல் மத்திய அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு ஜெவின் உடலை அடக்கம் செய்யும் வரை காத்திருந்து விட்டு சென்றார். 

பன்னீர்செல்வம் தனி அணியாக  பிரிந்த போது பாஜகவே அவரை இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தெரிந்தும் சசிகலா அணி திமுகவையே குற்றம் சாட்டியது. 

ஆனாலும் பாஜக சசிகலா குடும்பத்தை ஒதுக்கியது. இதனிடையே சசிகலாவிற்கும், டிடிவி தினகரனுக்கும் சிறைவாசத்தை காட்டியது பாஜக. இதையடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமியையும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பொதுமக்களிடையே புகார் எழுந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், சென்னை திருவாண்மியூரில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் எடப்பாடி அணியும் பன்னீர்செல்வம் அணியும் விரைவில் இணைந்து செயல்பட உள்ளதாகவும், இரு அணிகளும் இணைந்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்ய வேண்டும் என பாஜக விரும்புவதாகவும் தெரிவித்தார்.