தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து திடீரென ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலோசனை முடிவில் 10ம் வகுப்பு தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் அரசு கூறி உள்ளது. ஆனாலும், தேர்வினை தள்ளிவைக்க வேண்டும் ஆசிரியர்கள் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. ஆனாலும், தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின், ராமதாஸ், வைகோ உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் முதல்வர் எடப்பாடியை  அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில், 10ம் வகுப்பு தள்ளி வைப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.