கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது வேண்டுமென்றே திட்டமிட்டு புரளியை கிளப்பிவிடுகின்றனர். 

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கடுமையாக வெயில் வாட்டிவதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் பள்ளியின் முன் கேட்டை மூடி விட்டு பின் கேட் வழியாக மாணவர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

மேலும் இந்த கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதுபோல் சீருடையும் மாற்றம்செய்யப்பட்டு தனியார் பள்ளிகளை மிஞ்சுகின்ற அளவிற்கு வண்ண சீருடைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.