ஜெயலலிதா மறைந்தவுடன் ஓபிஎஸ் முதலமைச்சராக்கப்பட்டார். பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அமைச்சர் செல்ர் ராஜு மற்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் ஓபிஎஸ்ஐ முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு சசிகலா முதலமைச்சராக வேண்டும் என போர்க்கோடி உயர்த்தினர்.

பின்னர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்தனர்.அதே நேரத்தில் சசிகலா,தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை அதிமுக ஒதுக்கி வைத்துவிட்டது. இதையடுத்து டி.டி.வி.தினகரன்  அம்மா மக்கள் முன்னேற்றகழகத்தை தொடங்கினார்.

ஆனாலும் தமிழக அமைச்சர்களில் ஒரு சிலர் இன்றும் சசிகலா ஆதரவாளர்களாகேவே இருந்து வருகின்றனர். அவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் அமைச்சர் செல்லூர் ராஜு. அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போதெல்லாம்  தனது சசிகலா விசுவாசத்தை வெளிக்காட்டிவிடுவார்.

 

இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்போதுள்ள அதிமுக அரசை அமைத்தவர் மாண்புமிகு சின்னம்மா தான் என்றும். திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற அம்மாவின் ஆசைப்படிதான் இபிஎஸ் – ஓபிஎஸ் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தான் ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள், ஆசா பாசங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு அமைதியாக கழகத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற உணர்வுடன் தான் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

அமைச்சர் செல்லூர் ராஜு  திடீரென சசிகலா குறித்து சிலாகித்துப் பேசியதையடுத்து அவர் அணி மாறப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.