மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அதிமுக ஆலோசானை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். தேர்தலில் அதிமுகவினர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அவர் அனைத்து இடங்களில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

வீடு வீடாக சென்று அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும் எனவும் வாக்காளர்களின் காலில் விழ வெட்கப்படாதீர்கள் என கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார். மதுரை மாவட்ட அமமுக கட்சியினர் 500 க்கும் மேற்பட்டோர் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தனர். அவர்களை வரவேற்ற அமைச்சர், உணர்ச்சி மிகுதியால் அமமுகவிற்கு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு வந்தது மகிழ்ச்சி என்றார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நடிக்கும் போது முதல்வராக ஆசைப்படவில்லை என்ற செல்லூர் ராஜு, தற்போதைய நடிகர்களின் முதல்வர் கனவு குறித்து விமர்சித்தார். மேலும் முதல்வர் பழனிசாமி இரவு பகல் பாராமல் உழைத்து வருவதால் ஒரு கோப்பு கூட நிலுவையில் இருப்பதில்லை என்றார்.