minister sellur raju open talk
நீண்ட இழுபறிக்குப் பிறகு இரட்டை இலை சின்னத்தை முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கட்சியின் கொடி, கட்சியின் பெயர் என அதிமுக தொடர்பான அனைத்தையும் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் பயன்படுத்தலாம். இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டது, தினகரன் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற்றதன் மூலம் அமைச்சர்களும் கட்சியின் நிர்வாகிகளும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதை நினைத்து இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.
இரட்டை இலையை பெற்ற மகிழ்ச்சியை அமைச்சர்களும் கட்சியின் நிர்வாகிகளும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், இரட்டை இலை கிடைத்துவிட்டாலே கட்சியில் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிட்டது என்று அர்த்தமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, இரட்டை இலை கிடைத்து விட்டதால், எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்களிடத்தில் சென்று வாக்கு கேட்டாலே போதும். அவர்களை நம்பி மக்கள் வாக்களித்தார்கள்.

தற்போது, அப்படியான சூழல் இல்லை. தற்போதைய ஆட்சியாளர்களின் முகத்தைப் பார்த்து மக்கள் வாக்களிக்க வாய்ப்பில்லை. எங்களின் செயல்பாடுகளைப் பொறுத்தே மக்கள் வாக்களிப்பார்கள். அதனால், மக்களுக்கான சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மத்தியில் சிறந்த ஆட்சி என்ற நன்மதிப்பை பெற்றால்தான் நாங்கள் மறுமுறை வெல்ல முடியும். அதை உணர்ந்து தற்போதைய ஆட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
