தினகரனையே நாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. தங்கத்தமிழ்ச்செல்வன் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவர் ஒரு ஓடுகாலி என்று அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடியாக கூறினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கூட்டுறவுத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலக கட்டிடங்கள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள் திறப்பு விழா நடந்தது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அமமுக ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவர் ஒரு ஓடுகாலி. அவர் மட்டுமல்ல அதிமுக கட்சியை பிளக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஓடுகாலிகள்தான். அவர் வருவார், பேசுவார், போவார். இதையெல்லாம் அதிமுக பெருசா நினைக்காது.

நாங்கள் இதையெல்லாம் கண்டு கொள்ளமாட்டோம். அதேபோல் தினகரனையே நாங்கள் ஒரு பொருட்டாக நினைக்கிறது இல்லை. இதில் தங்கத்தமிழ்ச்செல்வன் எல்லாம் எம்மாத்திரம். அமுமக தினகரன் குடும்பத்தை தவிர, தங்கத்தமிழ்செல்வன் உட்பட யார் கட்சிக்கு வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். உள்ளாட்சி தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு முடிவிற்கு வந்த பிறகு தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.