minister sellur raju compliments sasikala

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பாடுபட்டு அதிமுக ஆட்சியை சசிகலாதான் நீடிக்க செய்தார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது கணவர் நடராஜனைக் காண சிறையிலிருந்து 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார் சசிகலா. பரோலில் வந்துள்ள அவரை அமைச்சர்கள் சிலரும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் சந்திக்க வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது. ஆனால் சிறை நிர்வாகம் விதித்த கடுமையான நிபந்தனைகளினால் சசிகலா யாரையும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதேநேரத்தில் அமைச்சர்கள் சிலர் சசிகலாவை போனில் தொடர்புகொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலாதான். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை என தடாலடியாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் சசிகலாவிற்கு ஆதரவான பேச்சு, முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் முதல்வருக்கு விசுவாசிகளாக உள்ள அமைச்சர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பை அதிகரித்துள்ளது. தேவையான நேரத்தில் முதல்வர் அணியில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் வெளிவருவார்கள் என தினகரன் கூறிவந்த நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு, ஸ்லீப்பர் செல்கள் வெளிவரத் தொடங்கிவிட்டனரோ என மக்களை எண்ணவைத்துள்ளது.