பழநி கோவிலில் அத்துமீறி நுழைந்தது உண்மையா.? வானதி கேட்ட கேள்வி! அமைச்சர் சேகர்பாபு என்ன சொல்கிறார்.?
பழநி தண்டாயுதபாணி திருக்கோவில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அமைச்சர் சேகர் பாபு.

கோவை பேரூர் பட்டீசுவர சுவாமி திருக்கோவிலில் உள்ள கல்யாணி என்ற, யானைக்கு புதிதாக கட்டப்பட்ட குளியல் தொட்டியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று, திறந்து வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, கடந்த 2006 ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் துவக்க அரசாணை வெளியிட்டார்.
பின்னர் 2007 ஆம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் துவங்கப்பட்டது. கடந்த காலங்களில் பள்ளிகள் மாணவர்கள் பயிற்சி பெற தரம் இல்லாத நிலை இருந்தது. இந்த பள்ளிகளை மேம்படுத்தவும், புதிய பள்ளிகள் துவக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து, 5 நிலையில் பயிற்சி பெற 15 பள்ளிகள் துவங்கப்பட்டது.
இதையும் படிங்க..அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்.. இபிஎஸ் - ஓபிஎஸ்ஸுக்கு பறந்தது நோட்டீஸ் - அதிமுகவை துரத்தும் சர்ச்சை!
அப்பள்ளிகளில் 210 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். எங்கும் தமிழ் மணம் கமழவும், ஆன்மிகத்தில் தமிழகம் முதன்மை பெறவும் இந்த நிகழ்ச்சி உதாரணமாக உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 27 திருக்கோவிலில் 29 யானைகள் பராமரிக்கப்படுகிறது. அந்த யானைகளுக்கு குளியல் தொட்டிகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் பரிந்துரைப்படி உணவு வழங்கப்படுகிறது. இந்த அரசு மனிதர்கள், யானைகள் நலன் காக்கும் அரசாக உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையில் இருந்த தொய்வான நிலையை அகற்றி, பக்தர்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வருகிறது.
பழநி தண்டாயுதபாணி திருக்கோவில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறித்த கேள்விக்கு, ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவது தான் அவரது வாடிக்கையாக உள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களும் பாராட்டும் வகையில் சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தது.
அதில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என அர்த்தமற்ற செய்தியை வெளியிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்கியதாலும், திருக்கோவிலை வைத்து வருமானம் பார்ப்பவர்களை முடக்கியதாலும் தேவையற்ற செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது என்று கூறினார்.
இதையும் படிங்க..AIADMK: தென்னரசுவிற்கு கிடைத்த பெரும்பான்மை!.. வலையில் சிக்கிய ஓபிஎஸ் - டாப் கியரில் எடப்பாடி பழனிசாமி !!