வசை பாடுபவர்களையும் வாழ்த்தச் செய்யும் அரசாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல, நீதிபதிகள் பாராட்டும் அரசாக தமிழக அரசு உள்ளது.
தமிழக காவல்துறை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அரியணையில் ஏறியுள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதிலிருந்தே பாஜகவுக்கும் -திமுகவுக்கும் இடையேயான மோதல் இருந்து வருகிறது. திராவிட கட்சிகளை ஒழிப்பதே தங்களின் நோக்கமென பாஜக முழங்கினாலும், அதிமுகவை காட்டிலும் திமுக மீதான அதன் பகை அதிகமாக உள்ளது. இந்துத்துவா சித்தாந்தத்துக்கு எதிராக திமுக வலுவாக இருப்பதாலேயே திமுகவை முதல் எதிரியாக பாஜக பாவித்து வருகிறது. கடுமையான எதிர்ப்பை மீறி திமுக ஆட்சி கைப்பற்றியுள்ள நிலையில், அதின் மீதான பாஜகவின் தாக்குதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் முதல் திமுக எதிர்ப்பு என்பது தீவிரமடைந்துள்ளது.

சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தேசியவாதி ஒருவர், கருத்துச் சுதந்திரத்திற்கு அருகில் ஒரு கருத்தைச் சொல்லும் போது அதைத் தேவையின்றி பிரச்சனை ஆக்குகிறார்கள். இங்குத் தமிழகத்தில் போலீசார் டிஜிபி கட்டுப்பாட்டிலேயே இல்லை. சைக்கிளில் செல்வதற்கும் செல்பி எடுப்பதற்கும் தான் இங்கு தமிழக டிஜிபி உள்ளார். தமிழகத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர்களும் ஐடி பிரிவினரும் தான் போலீசாரை கட்டுக்குள் வைத்துள்ளனர். அவர் நேர்மையான டிஜிபியாக இருந்தால் பாரபட்சம் இல்லாமல் அனைவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்தநாளையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே, ஜதி பல்லக்கு ஊர்வலத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு;- வசை பாடுபவர்களையும் வாழ்த்தச் செய்யும் அரசாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செயல்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் மட்டுமல்ல, நீதிபதிகள் பாராட்டும் அரசாக தமிழக அரசு உள்ளது.

மேலும், மழை, புயல், வெள்ளத்திற்கு பிறகும் 34 நாட்களாக முதலமைச்சர் களத்தில் உள்ளார். அண்டை மாநில பத்திரிகைகள் பாராட்டும் அளவிற்கு முதலமைச்சர் செயல்படுவது தமிழகத்திற்கு பெருமை என்றும் நீதியரசர் புகழேந்தி கூறியது போல் பாராட்டாவிட்டாலும் வசை பாடாமல் இருக்கலாம் என கூறினார். தவறு செய்வது தன்னுடைய கட்சியை சார்ந்தவர்கள் என்றாலும் உடனடியாக திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

குறிப்பாக குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு நடவடிக்கைகளில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டதாக பலரும் பாராட்டினார்கள். காவல்துறை சிறப்பாக செயல்படுவதற்கு இதுவே சான்று. மனசாட்சி இல்லாதவர்கள் கூட அண்ணாமலை போல காவல்துறையை பற்றி பேச மாட்டார்கள் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
