தமிழ்க் கடவுள் முருகனை அவமதித்தவர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது கண்டனத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கறுப்பர் கூட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் யூ டியூப் சேனல் ஒன்றில் இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்தும், புராணங்களை கேலி செய்தும் தொடர்ந்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக தமிழர்களின் கடவுளான முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசம் குறித்தும் ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்று அந்த யூ டியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

முருகப்பெருமானை இழிவுபடுத்திய இந்த வீடியோ கோடான கோடி தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வீடியோ குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன. இதனையடுத்து சென்னை திருவல்லிக்கேணி போலிசார் வழக்கு பதிவு செய்து, செந்தில்வாசன் என்பவரை வேளச்சேரியில் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக  புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சுரேந்திரன் என்பவரை, தமிழக காவல்துறையினர்  சென்னைக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் முருகப்பெருமானை அவமதித்த செயலுக்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி  கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்துஅவர் தம் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில், தமிழர்களின் கடவுளான மருதமலை வேலவன் முருகரை இழிவுபடுத்தி, நம்பிக்கையோடு வழிபடுவோரின் மனதை புண்படுத்தியிருப்பது வருத்தமளிக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். அனைவரது உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மரியாதை அளிப்பதே மதச்சார்பின்மை. இதை நிலைகுலைக்க செய்வோர் யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கவர்" என்று பதிவிட்டு தன்னுடைய கண்டனத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.