கொரானா பாதிக்கப்பட்டவரிடம் விடியோ கால் மூலமாக நலன் விசாரித்து அமைச்சர் கே.சி.வீரமணியிடம் கறிகேட்டு அடம்பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரானா உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களிடம் அமைச்சர் கே.சி.வீரமணி வீடியோ கால் மூலம் நலம் விசாரித்தார். அப்போது கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் ஒருவர், அமைச்சர் வீரமணியிடம் கறி உணவு வேண்டும் எனக் கேட்டு அடம்பிடித்தார். 

அவரை சமாதானப்படுத்திய அமைச்சர் கே.சி.வீரமணி, ‘’இப்போது டாக்டர் உங்களுக்கு சொல்வது என்னவென்றால் 10, 12 நாட்கள் அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக்கொண்டால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் வேலை செய்யாது என உலக அளவில் சுகாதாரத்துறையில் இருக்கும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். 

ஆகையால் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நம்மவர்கள் இவர்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். நீங்கள் எல்லோரும் நல்ல கண்டிஷனில் இருப்பதாக மருத்துவர் சொல்லியிருக்கிறார். ஆகையால் வெகுவிரைவில் நீங்கள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். அங்கு சிகிச்சை பெறக்கூடிய அத்தனை பேரும் 10 நாட்களில் நலமாக வீடு திரும்பி விடலாம் என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். டாக்டர்கள் சொல்வதை கேட்டு அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்’ என அவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.