அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அரசியல் நாகரிகத்தையும், நாவடக்கத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கற்றுத்தர வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் இருந்து வெள்ளையர்களை விரட்ட போராடிய காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு வெள்ளையரையே தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடியிருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சி கூவத்தில் கரைந்து விட்டது என்றும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நாகரீகம் இல்லாமல் பேசுவதாகவும், அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என விமர்சனம் செய்தார். அமைச்சரின் இந்த பேசுக்கு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இவரின் இந்த அநாகரிக பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ராஜேந்திர பாலாஜியை அரசியல் கோமாளி என விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் தானே அதிமேதாவியாகவும், தனக்குத்தான் அனைத்தும் தெரியும் என்ற தலைக்கனத்தோடு உளறி வருபவர் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் என்பதை மக்கள் நன்கறிவார்கள். பித்துப்பிடித்தவர் போல் பேசி வரும் இவர் சோனியா காந்தியை பெண்ணென்றும் பாராமல் ஒருமையில் விமர்சித்தது கண்டிக்கத்தக்கது. ராகுல் காந்தியையும், காங்கிரஸையும் அரசியல் நாகரிகம் மறந்து பேசியிருப்பதும் கண்டிக்கத்தக்கது.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை, கோட்பாடுகளை மறந்து தனது பதவியைக் காப்பாற்ற மோடியின் காலில் விழுந்து மோடியை ‘டாடி’ என்று அழைத்தவர் ராஜேந்திர பாலாஜி. அவருக்கு அரசியல் நாகரிகத்தையும், நாவடக்கத்தையும் அ.தி.மு.க முன்னணித் தலைவர்களும், தமிழக முதல்வரும் கற்றுத்தர முன்வர வேண்டும். கீழ்த்தர விமர்சனம் தொடர்பாக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.