ரஜினி அரசியலுக்கு வந்தாலும் ஏற்று கொள்வோம். வராவிட்டாலும் ஏற்று கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூரில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’தமிழகத்தை மீட்கபோகிறேன். இந்தியாவை மீட்கபோகிறேன் என்று சொன்னவர்கள் வேலை இல்லாதவர்கள். எடப்பாடி ஆட்சியில் தமிழகமும், மோடியின் ஆட்சியில் இந்தியாவும் பாதுகாப்பாக உள்ளது. அதிமுக கூட்டணி வலுவான கூட்டணி. 2021லும் ஆட்சியை பிடிப்போம். எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார். மருத்துவக்கல்லூரியில் ஏழை, எளிய மாணவர்கள் படிப்பதற்காக எந்த இடத்தில் மு.க.ஸ்டாலின் போராடினார்? 

இதில் உரிமை கொண்டாடுவது ஸ்டாலினின் தப்பாட்டம். மக்களை பாதுகாக்க வீதி உலா வருகிறார் எடப்பாடியார். கண்ணாடி அணிந்து கொண்டு ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்பவரல்ல எடப்பாடியார். ரஜினிகாந்த் வெளிப்படை தன்மையுடன் பேசியுள்ளார். உண்மை தான். சூப்பர் ஸ்டார் 70 வயதை கடந்த பின்னரும் கதாநாயகனாக நடிக்கக்கூடியவர். இன்றைய இளம் நாயகிகள் கூட அவருடன் நடிக்க ஆவலாக உள்ளனர். ரஜினியின் பேச்சில் உண்மை இருக்கிறது. நியாயம் இருக்கிறது.

திடீரென கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் சுற்றிவர அவரது உடல் நிலை ஒத்துவருமா? என்று அவரது நண்பர்கள் அச்சப்படுகிறார்கள். அதன் வெளிப்பாடு தான் அறிக்கையாக வந்துள்ளது. ரஜினி பயப்படுகிறார் என்று அர்த்தமல்ல. மொத்தத்தில் ரஜினியின் எண்ணம் நல்ல எண்ணம். ரஜினி அரசியலுக்கு வந்தாலும் ஏற்று கொள்வோம். வராவிட்டாலும் ஏற்று கொள்வோம். நல்லாட்சி கொடுப்பவர்களை ஆதரிப்பார். தமிழகத்தில் நீண்ட நாள் அவர் நன்றாக இருக்க வேண்டும்’’எனத் தெரிவித்தார்.