தமிழக அமைச்சரவையில் வாயில் வாஸ்து சரியில்லாத நபர்களாக, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுபவர்களில் முக்கியமானவர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, சில நேரங்களில் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர். இவர்களில்  கடந்த சில மாதங்களாக டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பதோடு, கழுவிக் கழுவி ஊற்றப்படுவதில் முக்கியமானவராகவும் இருந்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 

‘அம்மா வழிகாட்டுதலில் இந்த ஆட்சி நடக்கிறது. அதையும் தாண்டி பிரச்னை வந்தால் டெல்லியிலிருப்பவர் பார்த்துக் கொள்வார். மோடி எங்களின் டாடி!’ என்று கழகத்தின் தன்மானத்துக்கு பால் ஊற்றி, சங்கும் ஊதினார் இந்த பால்வளத்துறை அமைச்சர். 

முதல்வர் இ.பி.எஸ்.ஸை புகழ்வது போல் தாறுமாறான வசனங்களில் பேசி, கன்னாபின்னா விமர்சனங்களில் இவர் இழுத்து விட முயல்வதாக அ.தி.மு.க.வின் உள்ளேயே அதிருப்தி வெடித்தது. ‘ராஜேந்திர பாலாஜி, ப்ளீஸ் அமைதியா இருங்க.’ என்று தலைமை அறிவுறுத்தியும், எச்சரித்தும் கூட இவர் எல்லை தாண்டியது ‘ஒருவேளை தினகரனின் ஸ்லீப்பர் செல்லோ இவர்?’ என்று முணுமுணுக்க வைத்தது அ.தி.மு.க.வினரை. 

இந்நிலையில், சமூக வலை தளங்களில் தாறுமாறாக விமர்சிக்கப்பட்டும், கிண்டலடிக்கப்பட்டும் வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நேற்று இரவிலிருந்து நெட்டிசன்கள் கொண்டாடி வரும் சூப்பர் ஸ்டார் அவதாரம் எடுத்துள்ளார். காரணம் ‘இந்துக்களை அசிங்கப்படுத்தி பேசும், கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும்.’ என்று கர்ஜித்து, அமிலத்தை கொட்டிவிட்டார். 

ரா.பா.வின் இந்த ஆத்திரத்துக்கு சமூக வலைதளங்களில் ஏகபோக ஆதரவு உருவாகியிருப்பதுதான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்துள்ளது. ‘அண்ணே இன்று முதல் நான் உன் ரசிகன்! ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீர் அமைச்சரே! உங்க வாழ்நாளில் நீங்க சொன்ன ஒரே உருப்படியான வார்த்தை இதுதாம்ணே.’ என்று ஆரம்பித்து பலவாறு கொண்டாடி இருக்கிறார்கள். 

அதே நேரத்தில் இதற்கு எதிர்மறையாக சிலர் அமைச்சரை விமர்சித்து ‘வன்முறை பேச்சுக்கு வன்முறை பேச்சை தீர்வாக ஒரு அமைச்சர் நினைக்கலாமா? நீங்களே இப்படி பேசினால் சாதாரண மனிதனின் உணர்ச்சி எப்படி பொங்குமென சிந்தியுங்கள்!’ என்று திட்டியிருக்கின்றனர். 

இந்த சூழலில், கமலை இப்படி வன்முறை வார்த்தைகளில் மிரட்டியதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரான அருணாச்சலம் ‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தன் பதவி பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்துகொண்டதற்ம்காக அவர் வகிக்கும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்’ என்று பொங்கியிருக்கிறார் அறிக்கையில். 
ஒரே போர்க்களம்தான் போங்க!