அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி பேசியுள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில்தொகுதி சார்பில் குருவிகுளத்தில் அண்ணா பிறந்தநாள் விழா, நலத்திட்டங்கள் வழங்கல் மற்றும் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்; அண்ணாவின் பிறந்தநாள் விழாவை அதிமுக. தலைமையிலான அரசு அனைத்து பகுதிகளிலும் கொண்டாடி வருகிறது. சென்னை மகாணம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் வைத்தவர் அறிஞர் அண்ணாதான். அதிமுக அரசு பல நல்ல திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தி வருகிறது.  

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் கூட்டு குடிநீர் திட்டங்கள்அனைத்தும் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சியில் மக்கள் பயமில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அதிகப்படியான மின்வெட்டு ஏற்பட்டது திமுக. ஆட்சியில் தான். மக்களுக்கு நல்ல திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தும் போது அதை செயல்படுத்த விடாமல் ஸ்டாலின் தடுத்து வருகிறார். குறிப்பாக பொங்கலுக்கு முதலமைச்சர் 1000 ரூபாய் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏழை மக்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதை தடுத்து வழக்கு போட்டு கிடைக்க விடாமல் செய்ததும் ஸ்டாலின் தான்.

மக்களுக்கு எங்களை பிடிக்காமல் இருந்தால் இடைத்தேர்தலில் வாக்களித்து இருக்க மாட்டார்கள். ஆனால் 9 இடங்களில் வெற்றி பெற செய்து இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றும், திமுக. ஆட்சி வந்து விட கூடாது எனவும் வாக்களித்து உள்ளார்கள். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் அங்கு போய் ஒன்றும் பேச முடியாது. கிணற்றில் போட்ட கல் போல தான் இருக்க வேண்டும். எனவே மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரும் அண்ணன் எடப்பாடியார் ஆட்சி மீண்டும் தொடர அதிமுகவை ஜெயிக்க வைங்க என இவ்வாறு அவர் பேசினார்.