தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றார். மதுரை விமான நிலையத்திலிருந்து அமைச்சர் ரகுபதியை அழைத்துச் செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து போலீஸ் பாதுகாப்பு வாகனம் சென்றது. 

திருப்பத்தூர் அருகே சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் போலீஸ் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 போலீசார் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றார். மதுரை விமான நிலையத்திலிருந்து அமைச்சர் ரகுபதியை அழைத்துச் செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து போலீஸ் பாதுகாப்பு வாகனம் சென்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி விலக்கு ரோடு பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது சாலையில் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், பாதுகாப்பு வாகனம் சாலை அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிவகுருநாதன், பாலசுப்பிரமணியன், குணசேகரன், விக்னேஷ், கருப்பையா ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கீழசெவல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.