கொரோனா காய்ச்சலைக்கூட கட்டுப்படுத்த முடியும் ஆனால் ஸ்டாலின் அவர்களின் பொறாமை காய்ச்சலை கட்டுப்படுத்தவே முடியாது என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆவேசம் தெரிவித்துள்ளார். அம்மா சேரிடபில்  டிரஸ்ட் சார்பில் அம்மா கிச்சன் மூலம் மதுரையில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கு 3 வேளை உணவும், 2 வேளை பாசிப்பருப்பு சுண்டல் மற்றும் இஞ்சி டீ  உள்ளிட்டவைகள் வழங்கப்பட உள்ளது,உணவு தயாரிக்கும் அம்மா கிச்சன் கூடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை பார்வையிட்டு உணவை பரிசோதனை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- உணவே மருந்து என்பார்கள் அதுபோல் இங்கு அம்மா கிச்சனில்  உணவுகள் ஆரோக்கியமான முறையில் தயார் செய்யப்படுகிறது. 

இங்கே தயாரிக்கும் உணவில் இஞ்சி, மிளகு ,சுக்கு, வெங்காயம், பூண்டு இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்திருக்கிறது. இங்கு புரதச்சத்து நிறைந்த உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதுவரை கொரோனா குறித்து  நூற்றுக்கும் மேற்பட்ட அறிக்கைகளை விட்டுள்ளார், அந்த அறிக்கைகளில் ஒரு அறிக்கை கூட மக்கள் நலன் சார்ந்த அறிக்கை அல்ல. அத்தனை அறிக்கைகளும் பொய்யான, விஷமத்தனமான, மக்களை அச்சுறுத்தும் வகையில் தான் இருந்திருக்கிறது. நோய் உள்ளவர்களுக்கு நம்பிக்கைதான் மருந்து ஆனால் ஒரு இடத்தில் கூட மக்களுக்கு  நம்பிக்கையை அவர் கூறவில்லை. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் அரசுக்கு நல்ல ஆலோசனைகளை கூறவேண்டும், ஆனால் ஸ்டாலின் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் அரசு அதிகாரிகளையும் அரசையும் வசைபாடி வருகிறார். எப்போதும் பழி சொல்லுபவர்களிடம் வழி கேட்டால் தெரியாது என்பார்கள், அதுபோலத்தான் இன்றைக்கு எதிர்க்கட்சிகள் உள்ளன. 

இன்று காலை கூட 5:30 மணிக்கு நான் அம்மா கிச்சனில் ஆய்வு செய்தபோதும்கூட முதலமைச்சர் என்னிடம் தொலைபேசியில் அம்மா கிச்சன் மூலம் வழங்கப்படும் இந்த உணவுகளை சரியான  நேரத்தில் வழங்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை எனக்கு வழங்கினார். ஆனால் இதே எதிர்க்கட்சி  தலைவர்  ஸ்டாலின் இத்தனை மணிக்கு என்ன செய்து கொண்டிருப்பார்? மக்களைப் பற்றி சிந்திக்க மாட்டார், மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் முதலமைச்சரும், அதேபோல் அவருக்கு உறுதுணையாக இருக்கும் துணை முதலமைச்சருமே ஆவர்.இந்த கொரோனா காய்ச்சலை கூட கட்டுப்படுத்த முடியும் ஆனால் ஸ்டாலின் பொறாமை  காய்ச்சலை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் சரவணன், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட இலக்கிய அணி  செயலாளர் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் மகாலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.