சென்னையில் கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் இருப்பதை போல இனி ஜெயலலிதாவின் நினைவிடமும் இருக்கும் என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறையால் 2016-ம் ஆண்டு மறைந்தார். அவர் வசித்து வந்த  போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்ற 2017-ல்  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பையும் சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

இந்நிலையில், போயஸ் கார்டனின் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற ஆளுநரின் ஒப்புதலுடன் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்தின் மூலம், ‘புரட்சி தலைவி ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை’ அமைத்து பணிகளை தொடங்க அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாகின்றன. ஜெயலலிதா நினைவு இல்ல அமைப்பின் தலைவராக முதல்வர் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
 நீண்ட நாட்கள் கழித்து ஜெயலலிதாவின் இல்லம் அரசு நினைவு இல்லமாக அறிவித்திருப்பது அதிமுக  தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா நினைவு இல்லம் பற்றி தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், “வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதி. சென்னையில் கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் இருப்பதை போல இனி ஜெயலலிதாவின் நினைவிடமும் அவருடைய புகழைப் போற்றும் வகையில் இருக்கும். சென்னையின் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக போயஸ் கார்டன் மாறும். ஜெயலலிதா நினைவிடம் வரலாற்றில் இடம்பிடிக்கும்” என்று பாண்டியராஜன் தெரிவித்தார்.