minister pandiyarajan criticize dinakaran

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவில், பிரஷரால் வெடிக்கப்போவது யார் என்பது தெரியும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வகையில் தங்களின் வலிமையை நிரூபிக்க அதிமுக, திமுக மற்றும் தினகரன் ஆகிய மூன்று தரப்பும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை மீட்கும் போராட்டத்தில் தோல்வியடைந்த தினகரன், கடந்த முறை தான் போட்டியிட்ட தொப்பி சின்னத்தையே இந்த முறையும் ஒதுக்க வேண்டும் என கோரியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் அவருக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கியது.

இதையடுத்து, எதிரிகள் மற்றும் துரோகிகளின் பிளட் பிரஷரை(ரத்த அழுத்தத்தை) எகிற வைக்கவே, பெண்களுக்கு பிடித்த பிரஷர் குக்கர் சின்னம் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தினகரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவில், பிரஷரால் வெடிக்கப்போவது யார் என்பது தெரியும் என தெரிவித்தார். மேலும் பிரஷர் இல்லாமல் அதிமுக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்பதாகவும் பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.