வெளிநாடு சுற்றுப்பயணத்தின்போது மற்ற அமைச்சர்களை விட அமெரிக்காவில் தொழில்துறை அமைச்சரான எம்.சி.சம்பத் தனது செயல்பாடுகளால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிர வைத்து இருக்கிறார். 
 
கடலூர் தொகுதியை சேர்ந்தவர் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத். இவரது சகோதரர் எம்.சி.தாமோதனும் முன்னாள் அமைச்சராக இருந்தவர். அமைதியாக இருந்தாலும் எம்.சி.சம்பத் தனது செயல்பாடுகள் மூலம் தனது ஆளுமையை நிரூபிப்பவர்.

அதிமுக அமைச்சரவையில் ஜெயகுமார், வேலுமணி, தங்கமணி ஆகியோர் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்கள். அடுத்து தங்களது திட்டங்களை அடிக்கடி தொடங்கி வைப்பதன் மூலம் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் லைம் லைட்டில் ஜொலித்து வருகிறார்கள். தங்களது கிண்டல் பேச்சுக்களால் செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கவனம் ஈர்த்து வருகிறார்கள்.  அடுத்து தனது ஆக்ரோச வார்த்தை, தைரியமான பேச்சால் மக்களறிந்த அமைச்சராக வலம் வருகிறார் ராஜேந்திர பாலாஜி.

இந்த லிஸ்டில் இடம்பிடிக்காமல் எங்கிருக்கிறோம் என காட்டிக் கொள்ளாமல் சத்தமே இல்லாமல் தனது துறையை செம்மையாக நடத்தி வருகிறார் தொழில் துறை அமைச்சரான எம்.சி.சம்பத். முதலீடுகளை திரட்ட வெளிநாடுகளுக்கு அமைச்சர்களுடன் சென்றிருந்தாலும் இவர் துறை சார்ந்த விஷயங்கள் தான் முக்கியமானவை., அதில் ’யாதும் ஊரே’ ஹைலைட். வெளிநாடு சென்று அதுவரை மாட்டைப் பார்த்தேன்... கோழியை பார்த்தேன்... என சுற்றிப்பார்த்து வந்த எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை யாதும் ஊரே என்கிற டாபிக் மூலம் அர்த்தப்படுத்தி இருக்கிறார் எம்.சி.சம்பத். அதுவரை ஒரு முதலமைச்சருக்கான புரட்டோகாலே இல்லாமல் இருந்து வந்தது எடப்பாடியாரின் பயணம்.

 

புரோட்டக்கல் முறைப்படி வரவேற்று அமெரிக்க தமிழ் சங்கத்தினரை திரட்டி மாலை மரியாதையுடன் திக்குமுக்காட வைத்து விட்டார் எம்.சி.சம்பத். வெளிநாட்டு முதலீடுகளை கவர பல மாதங்களாக தமிழகத்தில் இருந்தே திருப்பூர் சக்திவேல் உள்ளிட்டோரை கொண்ட ஒரு குழுவை அமைத்து அமெரிக்காவில் எப்படி முதலீடுகளை திரட்டுவது... யாரை அணுகுவது? என்னென்ன ஒப்பந்தங்களை முன்னெடுப்பது? என தீர விசாரித்து பல வேலைகளை ஆணித் தனமாக நடத்திவிட்டே முன்னேற்பாட்டுடன் அமெரிக்கா சென்றுள்ளனர். 

புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முன்பே தயார் செய்து விட்டனர். அமெரிக்காவின் சான் ஹூசே நகரில் வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக, தமிழர்களை ஒருங்கிணைக்கும் "யாதும் ஊரே" திட்டம் மிகச் சிறப்பு வாய்ந்த திட்டம். அங்கு ரூ.2300 கோடியில் 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்வில் 16 நிறுவனங்களுடன் ரூ.2,780 கோடி மதிப்பில் முதலீடு செய்து தொழில் துவங்கப்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக முக்கிய காரணமாக இருந்தவர் எம்.சி.சம்பத். இப்படி அமைதியாக இருந்து சாதித்த எம்.சி.சம்பத்தை பார்த்து அமெரிக்காவில் ஆடிப்போய் விட்டாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

 

முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்து வந்த எதிர்கட்சிகளின் வாயை அடைத்து இருக்கிறார் எம்.சி.சம்பத். எதற்காக பயணம் சென்றார்களோ அதனை நிறைவேற்றிக் கொடுத்து நிரூபித்து இருக்கிறார் எம்.சி.சம்பத். இந்த ஒப்பந்தங்கள் மூல 20000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டங்கள் உண்மையில் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் நிறுவன விரிவாக்கம் அதிகரிக்கும். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில் தமிழகத்திற்கான முதலீட்டை திரட்டி சாதனை படைத்திருக்கிறார் தொழில் துறை அமைச்சரான எம்.சி.சம்பத்.