ஒன்றிணைவேம் வா என்பது மக்களுக்கு சிறப்பாக சேவை செய்வதாகக் கூறி அரசு மீது பழி சுமத்தவே, அந்தத் திட்டத்தை தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’கடந்த 65 நாட்களாக கொரோனா தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 71,067 நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கொரோனா காலத்தினால் அளிக்க முடியாத சூழல் உருவாகியது அவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற கடுமையான சூழல் இதுவரை சந்தித்ததில்லை. தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சிலர் கொச்சைப்படுத்துகின்றனர். தமிழக அரசு குழுக்களை அமைத்து அன்றாட கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இறப்பு குறைவாக இருப்பது மன நிறைவை தருகிறது.

 65 நாட்கள் உணவுப்பொருள் தேவையை முறையாக பூர்த்தி செய்திருக்கிறோம். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரசி வழங்கப்பட்டு வருகிறது.  கொரோனாவால் தடை செய்யப்பட்ட 845 பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் உணவு பஞ்சம் என்ற நிலை வரவே இல்லை. இதனை சிலர் பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசை பழி சுமத்துவதற்காக எதிர்க்கட்சி தலைவர் ஏப்ரல் 20 முதல் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை தொடங்கியிருக்கிறார். 

அரசாங்கம் செயல்படவில்லை என்பதை போல தினந்தோறும் அரசியல் நாடகமாடிக் கொண்டிருக்கிறார். போக்குவரத்து மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் சம்பந்தமாக ஒரு லட்சம் மனுக்கள் கொடுத்ததாக திமுக எம்.பிக்கள் சொன்னார்கள், ஆனால் அவர்கள் கொடுத்த 97 ஆயிரம் மனுக்களில் ஒரு மனு கூட அவர்கள் சொன்ன கோரிக்கையாக இல்லை’’எனத் தெரிவித்த அவர் அதற்கான ஆதாரங்களையும் முன் வைத்தார்.