உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்திக்க, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு  காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வருகின்றனர். 

சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்றுவந்த திமுக தலைவர் கருணாநிதி ஜூலை 28 நள்ளிரவு 1.30 மணி அளவில் மீண்டும் கோபாலபுரம் மாடி அறையிலிருந்து கருணாநிதியை ஸ்ட்ரெச்சரில் கீழே அழைத்துவந்தனர். தலைவா தலைவா என்று தொண்டர்கள் கதறினார்கள். நள்ளிரவு 1.30 மணி அளவில் ஆம்புலன்ஸில் கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கே அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இப்போது அவர் உடல்நிலை கொஞ்சம் சீராகி வருகிறது. ரத்த அழுத்தம் அதிகமானதால் அவரது உடல்நிலை மோசமானது. இந்த நிலையில் அவரது உடல்நிலை பற்றி விசாரிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காவேரி மருத்துவமனைக்கு வர இருக்கிறார்.

தற்போது அவர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் கிளம்பி இருக்கிறார். இன்று  பிற்பகல் அவர் காவேரி மருத்துவமனைக்கு வர இருக்கிறார். அவருடன் பாஜக தலைவர்களும் , மத்திய அமைச்சர்கள் சிலரும் வர வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வெளியே பலத்த போலிஸ்  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.