“நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் என்னை பிளாக் செய்துள்ளார்” என்று நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, பாஜக அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களை வைத்துவருகிறார். குறிப்பாக குடியுரிமை திருத்த சட்டம், இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்தெல்லாம் குஷ்பு விமர்சனங்களை வைத்துவருகிறார். இந்நிலையில் தன்னை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பிளாக் செய்திருப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டர் பதிவில் குஷ்பு வெளியிட்டுள்ள தகவலில், “நிர்மலா சீதாராமன் என்னை ப்ளாக் செய்திருக்கிறார். அவர் உண்மையை கேட்க விரும்பவில்லை.  நரேந்திர மோடி, அமித் ஷா போன்று பொய்யை மட்டுமே சுவாசித்து, உண்டு, வாழும் நபர்களுடன் வாழ்வதால் அவர் மீது குற்றம் சுமத்த ஒன்றும் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பொருளாதார நிலை குறித்து காங்கிரஸ் கட்சியினர் அடிக்கடி விமர்சனங்கள் செய்துவரும் நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பே குஷ்புவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பிளாக் செய்துவிட்டார். தற்போதுதான் அதை குஷ்பு ட்விட்டரில் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.