Asianet News TamilAsianet News Tamil

83 கோடிக்கு விற்பனையான ஆவின் பொருட்கள்… பெருமிதம் தெரிவிக்கும் அமைச்சர் சா.மு.நாசர்!!

தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் 83 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். முன்னதாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தின் உறுதித்தன்மை, உபரி நீர் வெளியேற்றப்படும் பகுதி, மதகுகளின் உறுதி போன்றவற்றை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

minister nasar says about aavin sales
Author
Thiruvallur, First Published Nov 6, 2021, 10:59 AM IST

பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தின் உறுதித்தன்மை, உபரி நீர் வெளியேற்றப்படும் பகுதி, மதகுகளின் உறுதி போன்றவற்றை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார். பூண்டி ஏரியிலிருந்து கடந்த 3 ஆம் தேதி முதல், விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 3 ஆம் தேதி இரவு, திருவள்ளூர் அருகேமெய்யூர், மொன்னவேடு பகுதியில்இருந்த தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேதமடைந்த தரைப்பாலத்தையும், பாலம் சீரமைக்கும் பணிகளையும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தரைப் பாலத்தை உடனடியாக சீரமைக்கும் பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருவதாகவும் தற்போது மழை குறைந்துள்ளதால் பூண்டி ஏரியிலிருந்து, விநாடிக்கு 974 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இது மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறிய அவர், சேதமடைந்த தரைப்பாலம் சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று, விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். இப்பகுதியில் ரூ.14.95 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணி கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டதாக கூறிய அமைச்சர் நாசர், இன்றைய நிலவரப்படி இப்பணி 70 சதவீதம் முடிந்திருக்க வேண்டும் என்றும் ஆனால், 20 சதவீத பணிகள் கூட முடிவடையவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

minister nasar says about aavin sales

ஆகவே, பாலம் அமைக்கும் பணிகளை 6 மாதத்துக்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் 55 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறிய அவர், இந்த ஆண்டு ஆவின் பொருட்கள் 83 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இதுவரை ஆவின் வரலாற்றில் இல்லாத அளவில் தீபாவளி விற்பனை அமைந்துள்ளது என்றும் கடந்த ஆண்டு 600 டன் ஆவின் நெய் விற்பனையானதாக கூறிய அவர், இந்த ஆண்டு 900 டன் நெய் விற்பனையாகி உள்ளது என்றும் ஆவின் இனிப்பு வகைகளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 270 டன் விற்பனை ஆகியிருந்த நிலையில் இந்த ஆண்டு, 400 டன் விற்பனையாகியுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் கடந்த ஆண்டு தீபாவளிக்கு 55 கோடியாக இருந்த ஆவின் விற்பனை, இந்த ஆண்டு 83 கோடிக்கு விற்பனையாகிள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை 330 கோடி ரூபாயும் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் 7 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளுக்கு தினமும் ஆவின் பால் செல்வதால் , பால் கவர்களில் ஆவின் இனிப்புகள் விளம்பரம் செய்யப்பட்டதால், ஆவின் பொருட்கள் ஒரே நேரத்தில் 27,60,000 பேருக்கும் நேரடியாக விளம்பரம் சென்றடைந்துள்ளது என்றும் அடுத்தவாரம் சிங்கப்பூருக்கு ஆவின் பொருட்களை அளிக்க உள்ளதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios