Coronavirus: ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற அமைச்சருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்..!
வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு திடீரென உடல்நல்குறைவு ஏற்பட்டதையடுத்து அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்கவில்லை.
இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடியது. இதில், விஐபி, சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,912 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 28,561 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு விகிதம் 18.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்னை தொடர்ந்து புதிய தொற்று அதிக அளவில் பதிவாகி உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 7,520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 2,196 பேருக்கும், கோவையில் 3,390 பேருக்கும், திருவள்ளூரில் 998 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 738 பேருக்கும், ககுமரியில் 1148 பேருக்கும், மதுரையில் 718 பேருக்கும், திருப்பூரில் 897 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு திடீரென உடல்நல்குறைவு ஏற்பட்டதையடுத்து அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக முதலமைச்சர் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக தற்போது நடைபெற்ற மதுரை மாவட்டத்திற்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி அவர்கள் பங்கேற்கவில்லை. அமைச்சர் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் முன்னிலை வகித்து சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.