அறைக்குள் அமர்ந்துகொண்டு அனைத்தையும் வாட்ஸப் மூலமாக எல்லாவற்றையும் பார்ப்பதால், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கள யதார்த்தம் தெரியவில்லை என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஆவடி தொகுதிக்குட்பட்ட பணிகளில் பணியாற்றும் செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசுகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வழங்கினார். அதன் பின்னர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்ந்தோர் எண்ணிக்கையும் மற்ற எல்லா மாநிலங்களையும்விட குறைவு. இதற்கெல்லாம் அரசும் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புள்ள பணியே காரணம். ஒரு வேளை இதே சூழல் நீடித்தால், சில தளர்வுகளோடு அடுத்தக் கட்டமாகவும் ஊரடங்கு அமலாக வாய்ப்புள்ளது.


அரசின் தவறான நடவடிக்கைகளே கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்குக் காரணம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறிய கருத்து தவறு என்பது அவருடைய மனசாட்சிக்கே தெரியும். தொடக்கத்தில் அரசின் செயல்பாடுகளை அவரே பாராட்டியிருக்கிறார். அவருடைய கருத்தின் மூலம் களபணியில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்களின் அர்ப்பணிப்பு பணியை ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார். அறைக்குள் அமர்ந்துகொண்டு அனைத்தையும் வாட்ஸப் மூலமாக எல்லாவற்றையும் பார்ப்பதால், அவருக்கு கள யதார்த்தம் தெரியவில்லை. அவர் பிரஷாந்த் கிஷோர் சொல்வதை கேட்டு செயல்படுகிறார்” என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.