சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை கடந்த 7-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால், இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக முதல்வர் வேட்பாளரை தேர்தல் நேரத்தில்தான் அறிவிக்கப்படுவார் என தமிழக பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிவித்தார். இதேபோல கூட்டணி சார்பாக முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என்று பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசனும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் சென்னை திருவேற்காட்டில் செய்தியாளார்களை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று சந்தித்தார். அப்போது பாஜக தெரிவித்த கருத்து குறித்து மாஃபா பாண்டியராஜனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மா.ஃபா. பாண்டியராஜன், “அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை நாங்கள் அறிவித்துள்ளோம். தேர்தலுக்கு இந்தக் கூட்டணி அதிமுக தலைமையில்தான் அமையும். முதல்வர் வேட்பாளரை கூட்டணி கட்சிகள் இணைந்து முடிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தால், அது அவர்களுடைய உரிமை.


அதிமுகவைப் பொறுத்தவரை இக்கூட்டணியில் பெருவாரியான தொகுதிகளில்  அதிமுகதான் தேர்தலை சந்திக்கும். அதனால், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்தான் கூட்டணியின் முதல்வராக இருப்பார். இதில் சந்தேகம் எதுவும் இல்லை” என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.