முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் சார்பட்டா பரம்பரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஜெயக்குமார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது வைரலாகி வருகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சார்பட்டா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியானது. இதில் திமுக தொடர்பாக பல்வேறு காட்சிகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக பசுபதி இந்த படத்தில் திமுக தொண்டராகவே வாழ்த்திருப்பார். இதில் அதிமுக குறித்தும், எம்.ஜி.ஆர். பற்றியும் அவதூறான கருத்துக்கள் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “30 ஆண்டு கால நல்லாட்சியையே திட்டமிட்டு மறைத்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.சமீபத்தில் வெளியாகிய #சார்பட்டாபரம்பரை படத்தில் புரட்சித்தலைவர் #MGR க்கும் விளையாட்டு துறைக்கும் தொடர்பே இல்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் திமுகவின் பிரச்சாரப்படமாகவே உள்ளது” என பகிரங்கமாகவே சாடியிருந்தார்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டை நானும் பார்த்தேன். தற்போது சார்பட்டா திரைப்படத்தின் விடுபட்ட காட்சிகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதில் ஜெயக்குமாரே குத்துச்சண்டை போடுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர் தான் டான்சிங் ரோஸ் என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த காட்சியையும் பாருங்கள் என்று கிண்டலாக பதிலளித்துள்ளார்.
