மதுரை மருத்துவ கல்லூரி மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சமஸ்கிருத உறுதிமொழியில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சமஸ்கிருதத்தில் உறுதிமொழி

மதுரை மருத்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான வரவேற்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றனர். இதனால் அந்த இடத்தில் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் HIPPOCRATIC உறுதிமொழியே பின்பற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் HIPPOCRATIC உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் இது ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லையென்றும் கண்டிக்கதக்கது என கூறியிருந்தது. இதனையடுத்து மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவத்தின் தந்தை என குறிப்பிடப்படும் ஹிப்போகிரேட் பெயரிலேயே உலகளவில் பெரும்பாலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் (white gown ceremony)யின் போது உறுதிமொழி ஏற்பர். சில நாட்களுக்கு முன் சமுக வலைத்தளங்களில் மகரிஷி சரக் ஷப்த் என சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கப்படும் என செய்திகள் பரவின அப்போதே சுகாதாரத்துறை செயலாளரிடம் கூறி அனைத்து மருத்துவமனை கல்லூரி முதல்வர்களுக்கு இந்த செய்தியால் எந்தவித குழப்பமும் ஏற்படாமல் இருக்கும் படி அறிவுறுத்தினேன். மேலும் இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்பட்டபோது இந்த உறுதிமொழியை ஏற்பது என்பது விருப்பத்தின் பெயரிலேயே ஏற்கலாம் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

சிகிச்சையில் பிராமணர்களுக்கு முன்னுரிமை

தற்போது இதனை சமஸ்கிருத மொழியில் உறுதி மொழி எடுப்பதை ஊக்குவித்தால் எதிர்காலத்தில் சமஸ்கிருதத்தில் மட்டுமே ஏற்க வேண்டும் என பலர் கருத்து கூற வாய்ப்பு உள்ளது. சமஸ்கிருத மொழியை 25000 பேர் மட்டுமே பேசி வருகின்றனர் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஹிப்போகிரேட் கிரேக்க உறுதிமொழியில் இடம்பெற்றுள்ள வாசகங்களுக்கு விளக்கம் அளித்தார், மருத்துவர்கள் விருப்பு வெறுப்பு இல்லாது அனைவரையும் மருத்துவம் அளித்து காப்பாற்ற வேண்டும், நோயாளிகளை சிறப்பாக கவனிப்பது, தேவையின்போது மற்ற மருத்துவர்களிடம் உதவி கேட்பது போன்ற பல நல்ல கருத்துகள் உள்ளன. தன்னை தாக்கிய நிலையிலும் எவர் ஓருவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என பல நல்ல கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறினார். ஆனால் மகரிஷி சரக் ஷபத்தில் உறுதிமொழியில் பசு, பிராமனர்களுக்கு முன்னுரிமை, மன்னனின் எதிரிக்கு, மக்களால் வெறுக்கப்படுபவர்கள், கெட்டவர்கள், இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு, ஆண் துணை இல்லாமல் மருத்துவத்துவமனைக்கு வரும் பெண்களுக்கு மருத்துவம் பார்க்க மாட்டேன் போன்ற பல்வேறு முரண்பாடான கருத்துகள் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மீண்டும் மருத்துவ பணியில் கல்லூரி முதல்வர்

மேலும் இந்த விவகாரத்தில் மருத்துவமனை முதல்வர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தனர். மேலும் மருத்துவமனை முதல்வர் பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றினார் என கூறினர். மேலும் அவர் என்னை சந்தித்து தனக்கு தெரியாமல் நடந்ததாக கூறினார். அதனை தொடர்ந்து காத்திருப்பு பட்டியலில் இருக்கும் மதுரை மருத்துவமனை கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவர் என அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்தார்