அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கமல் பேசிக் கொண்டிருக்கிறார் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "சூரப்பா துணை வேந்தராக நியமிக்கப்பட்டபோது தமிழ்நாட்டில் இதற்கு தகுதியானவர்கள் இல்லையா? என்று கேள்வி எழுப்பினேன். அந்தக் கேள்வி இப்போதும் தொக்கி நிற்கிறது, அந்த நிலைபாட்டில் மாற்றமில்லை.  சூரப்பாவின் செயல்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் இருந்தது. முறைகேடாக அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்தவர்களையும், பல்கலைக்கழக வாகனங்களை பயன்படுத்தியவர்களையும் விசாரித்து விட்டீர்களா? உள்ளாட்சித்துறை, கால்நடைப் பராமரிப்பு துறை, பால்வளத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை என அத்தனை துறை அமைச்சர்களும் ஊழலில் திளைக்கிறார்கள் என்று சமூக செயற்பாட்டாளர்களும், ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் அன்றாடம் குரல் எழுப்புகிறார்களே, அதை விசாரித்து விட்டீர்களா? தேர்வு நடத்துவதும், தேர்ச்சி அறிவிப்பதும் கல்வியாளர்களின் கடமை. 


கரைவேட்டிகள் இங்கேயும் மூக்கை நுழைப்பது ஏன்? இதுவரை காசு கொடுத்து ஓட்டு வாங்கியவர்கள், இப்போது மதிப்பெண்களை கொடுத்து மாணவர்களை வாங்க நினைக்கிறார்களா? சூரப்பாவின் கொள்கைச் சார்புகள், அரசியல் நிலைப்பாடுகளில் நமக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். இது கல்வியாளர்களும், அரசியல்வாதிகளுக்குமான பிரச்சனை இல்லை. நேர்மையாக வாழ நினைப்பவனுக்கும், ஊழல் பேர்வழிகளுக்குமான போர். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் அவரது அடையாளத்தை அழிக்க மறுப்பதா? சகாயம் துவங்கி சந்தோஷ் பாபு வரை இவர்களால் வேட்டையாடபட்டவர்களின் பட்டியல் பெரிது. பேரதிகாரிகளே இவர்களோடு போராடி களைத்து விருப்ப ஓய்வு பெறுகிறார்கள் என்றால் சாமானியனின் கதி என்ன? 

இதை இனிமேலும் தொடர விடக்கூடாது. இன்னொரு நம்பி நாராயணன் இங்கே உருவாகக்கூடாது. நேர்மைக்கும், ஊழலுக்குமான மோதலில் அறத்தின் பக்கம் நிற்க விரும்புபவர்கள் தங்கள் மவுனம் களைத்து பேசியாக வேண்டும். குரலற்றவர்களின் குரலாக நாம் தான் மாற வேண்டும். நேர்மை தான் நம் ஒரே சொத்து; அதையும் விற்று வாயில் போட்டு விட துடிக்கும் இந்த ஊழல் திலகங்களை ஓட ஓட விரட்ட வேண்டும் என சூரப்பாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பினார். 

இந்நிலையில், தருமபுரியில் அதிமுக அலுவலகத்தில்  தகவல் தொழில்நுட்ப பிரிவை திறந்து வைத்த அமைச்சர் கே.பி.அன்பழகனிடம்  அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் சூரப்பா விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்பது குறித்து தெரியாமல் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கிறார். அரசு மீது குற்றம்சாட்ட வேண்டும் என்பதற்காகவே கமல் பேசிக்கொண்டிருக்கிறார். கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்பதற்காக எதை எதையோ கமல் பேசுகிறார் என விமர்சனம் செய்துள்ளார்.