குத்தகை நிலத்தை காலி செய்யுமாறு மிரட்டுவதாக அமைச்சர் கே.சி.வீரமணி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குத்தகை நிலத்தை காலி செய்யுமாறு மிரட்டுவதாக அமைச்சர் கே.சி.வீரமணி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 
கூறியிருப்பதாவது: வேலூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தோம். இந்த குத்தகை காலத்தை நீட்டித்து கடந்த 2010-ல் சுந்தர்ராஜனுடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம். 

இந்நிலையில் அந்த நிலத்தை தொழிலதிபர் சேகர்ரெட்டி ரூ. 225 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும், நிலத்தை காலி செய்து கொடுக்குமாறு குத்தகைதாரர்களான எங்களுக்கு ரூ.65 கோடி தருவதாகவும் ஒப்பந்தம் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ரூ. 19 கோடியை காசோலை அல்லது வரைவோலையாக வழங்கவும், மீதி ரூ.46 கோடியை ரொக்கமாக தரவும் சேகர்ரெட்டி தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. 

ஆனால் ஒப்புக்கொண்டபடி எங்களுக்கான தொகையை வழங்காமல் தமிழக வணிகத்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் தூண்டுதலின் படி போலீசாரை வைத்து அந்த நிலத்தில் இருந்து எங்களை கட்டவிரோதமாக வெளியேற்ற முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த டிலிங்கை முடித்துக் கொடுத்தால் அமைச்சர் வீரமணிக்கு ரூ.100 கோடி கிடைக்கும் என்பதால் அந்த இடத்தை காலி செய்ய பல்வேறு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் எஸ்பி, டிஜிபி, சட்டப்பேரவைச் செயலாளர், அரசு தலைமை கொறடா ஆகியோரிடம் புகார் கொடுத்தோம். எந்த பலனும் இல்லை. எனவே அமைச்சருக்கு எதிரான இந்த ஊழல் புகார் தொடர்பாக சட்டப்பேரவைச் செயலாளர் மற்றும் அரசு கொறடா நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். பேரவை தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த வழக்கில் அரசிடம் கருத்து கேட்டு தெரிவிப்பதாக நீதிபதியிடம் கூறினார். இதையடுத்து, விசாரணையை நீதிபதி 2 வாரங்களுக்குத் ஒத்திவைத்தார்.